உள்ளூர் செய்திகள்

ரெயில் பயணிகளிடம் செல்போன் திருடிய சித்தூர் வாலிபரை காட்பாடி ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.

ரெயிலில் பெண் டாக்டர், பயணிகளிடம் செல்போன், லேப்-டாப் கொள்ளை

Published On 2023-02-15 09:45 GMT   |   Update On 2023-02-15 09:45 GMT
  • ஆந்திர வாலிபர் கைது
  • வேலூர் ஜெயிலில் அடைப்பு

வேலூர்:

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் இருந்து கேரளா மாநிலம் செல்லும் சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று வந்து கொண்டிருந்தது. இதில் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் பிரீத்தி மற்றும் சசிதரன் உள்ளிட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

காட்பாடி அருகே ரெயில் வந்த போது டாக்டர் ப்ரீத்தி வைத்திருந்த செல்போன் உள்ளிட்ட பைகள் மற்றும் சசிதரன் உள்ளிட்ட 5 பேரின் செல்போன்கள் ஒரு லேப்டாப் ஆகியவற்றை மர்ம நபர் ஒருவர் திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசில் புகார் அளித்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் சித்தூர் மாவட்டம் கெங்கரெட்டி பாளையத்தை சேர்ந்த ஹரிஷ் பாபு (வயது 29) என்பவர் நேற்று காட்பாடி ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி திரிந்து கொண்டிருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர் அப்போது அவரிடம் பல்வேறு ரெயில்களில் செல்லக்கூடிய ரெயில் டிக்கெட் இருந்தன.

இது பற்றி விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் சபரி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பெண் டாக்டர் உள்பட பயணிகளிடம் திருடியது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 6 செல்போன்கள் ஒரு லேப்டாப் மற்றும் பெண் டாக்டரின் பை பறிமுதல் செய்யப்பட்டது. அதில் 27 ஆயிரத்து மதிப்பிலான பொருட்கள் இருந்தன.

ஹரிஷ் பாபு கடந்த ஜனவரி மாதம் முதல் ரெயில்களில் திருடுவதை தொடங்கியுள்ளார். திருமணம் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு அவர் ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணம் செய்து சக பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டுள்ளார்.

போலீசார் ஹரிஷ் பாபுவை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

Tags:    

Similar News