தூய்மை பணிக்கு டிராக்டர் வழங்கி தொடங்கி வைக்கப்பட்டது.
பரதராமியில் தூய்மை பணிக்கு டிராக்டர்
- ரூ.9 லட்சம் மதிப்பில் வங்கப்பட்டது
- நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்கள் நிதியுதவி வழங்கினர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் பரதராமி ஊராட்சியில் தினம்தோறும் ஏராளமான குப்பைகள் சேருவதால் அதனை அகற்ற தூய்மை பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பரதராமி ஊராட்சி பொதுமக்கள் ரூ.3 லட்சத்து 4 ஆயிரத்தை டிராக்டர் வாங்க நிதி உதவி வழங்கினர்.
இதனை தொடர்ந்து தமிழக அரசின் நிதியாக 6 லட்சத்து 8 ஆயிரம் என மொத்தம் 9 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பீட்டில் பரதராமி ஊராட்சிக்கு டிராக்டர் வாங்கப்பட்டு தூய்மை பணி தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பரதராமி ஊராட்சி மன்ற தலைவர் பெ.கேசவேலு தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் குசலகுமாரிசேகர், ஒன்றிய குழு உறுப்பினர் இந்திராகாந்தி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சாந்திமகாலிங்கம், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஏ.ஜே.பத்ரிநாத் கே.ரமேஷ் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம், குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்கு டிராக்டரை அர்ப்பணித்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக பிரமுகர்கள் வேலு, ஆனந்தன் மற்றும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.