உள்ளூர் செய்திகள்

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

Published On 2023-09-23 14:42 IST   |   Update On 2023-09-23 14:42:00 IST
  • புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி நடந்தது
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்

வேலூர்:

புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை, திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் உள்ள பெருமாள் கோவில், வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில், காட்பாடி சாலையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத கல்யாண வெங்கடேச பெருமாள், மெயின் பஜாரில் உள்ள வெங்கடேச பெருமாள், பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவில், வேலப்பாடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டிருந்தன.

சோளிங்கரில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

குடியாத்தத்தை அடுத்த மீனூர்மலை வெங்கடேச பெருமாள் கோவிலில் ராஜ அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு காட்சியளித்தார் அதேபோல் பத்மாவதி தாயார் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி யளித்தார் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

குடியாத்தம் பிச்சனூர் தென்திருப்பதி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ரங்கநாதர், பத்மாவதி சமேத வெங்கடேச பெருமாள் கோவிலிலும் புரட்டாசி சனிக்கிழமையையொட்டி மூலவர் வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழ்அரசம்பட்டு அருகே உள்ள சிங்கிரிகோவில் லட்சுமி நரசிம்மர் கோவிலில் அதிகாலை மூலவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதிகாலை முதல் பக்தர்கள் அதிக அளவில் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.

பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. பெரு மாளுக்கு மலர்களாலும், வெள்ளி கவசத்தாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கே.வி.குப்பத்தை அடுத்த மேல்காவனூர் பத்மாவதி தாயார் சமேத திருவேங்கடம் உடையான் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு ராஜஅலங்காரம், ஆராதனை ஆகியவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News