காட்பாடி சாலையில் கால்வாயில் தேங்கி நிற்கும் கழிவுநீர்
- துர்நாற்றம் வீசுவதால் பயணிகள் அவதி
- நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
வேலூர்:
வேலூர் காட்பாடி சாலையில் தபால் நிலையம் அருகே உள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் தேங்கி உள்ளது. வேலூர் சிஎம்சி யில் சிகிச்சை பெறுவதற்காக வரும் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க வந்து செல்லும் பயணிகள் காட்பாடி சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சிற்க்காக காத்துக் கொண்டு இருக்கின்றனர்.
கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் பஸ்காக காத்திருக்கும் பயணிகள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
காட்பாடி சாலையில் உள்ள கால்வாய்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு தூர்வாரப்பட்டது. அதன் பிறகு மாநகராட்சி ஊழியர்கள் கால்வாயில் உள்ள அடைப்புகளை அப்புறப்படுத்தவில்லை.
இதனால் அங்குள்ள தங்கம் விடுதிகள், வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கால்வாயில் அடைப்பு உள்ளதால் கழிவு நீர் கால்வாயில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சாலையில் கழிவுநீர் வழிந்து ஓடுகிறது.
அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பிடித்தபடி கடந்து செல்கின்றனர். இதேபோல் பெங்களூர் சாலையில் உள்ள டி மண்டி தெருவில் அரிசி பருப்பு எண்ணெய் மிளகாய் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யும் வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. அங்குள்ள கால்வாயில் கழிவுநீர் செல்ல வழியில்லாததால் சாலையில் கழிவு நீர் தேங்கி உள்ளது.
இதனால் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்லும் வாடிக்கையாளர்கள் கழிவு நீரை கடந்து செல்ல கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
எனவே மாநகராட்சி அதிகாரிகள் கால்வாய்களில் உள்ள அடைப்புகளை தூர்வாரி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.