காட்பாடி ரெயில் நிலையத்தில் சீரமைப்பு பணி ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்கும்
- தெற்கு ெரயில்வே பொது மேலாளர் தகவல்
- ரூ.330 கோடியில் பணிகள் நடக்கிறது
வேலூர்:
காட்பாடி ரெயில் நிலையம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுகிறது. இந்தவழியாக தினமும் 120-க்கும் அதிகமான ரெயில்கள் சென்னை, ஜோலார்பேட்டை, திருப்பதி உள்ளிட்ட ஊர்கள் மார்க்கமாக இயக்கப்படுகின்றன. இதனால், எப்போதும் பயணிகள் நிறைந்து காணப்படும்.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள ரெயில நிலையங்களை மேம்படுத்த ரெயில்வே துறை திட்டமிட்டது. அதேநேரம், பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்தவகையில், முதல்கட்டமாக 50 ரெயில் நிலையம் சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதில், தமிழகத்தில் காட்பாடி, சென்னை எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய 5 ரெயில் நிலையம் அடங்கும். மேலும், இதற்கான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன்படி, காட்பாடி ரெயில் நிலையத்தில் 330 கோடி ரூபாயில் சீரமைப்பு செய்யும் பணிகள், கடந்த 23-ந் தேதி தொடங்கியது. இந்நிலையில், தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் குசல் கிஷோர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுசெய்தனர்.
இதில், ஆர்பிஎப் குடியிருப்பு மற்றும் அலுவலகம் அமையவுள்ள இடம், ரெயில்வே அலுவலர்கள் குடியிருப்பு மற்றும் அலுவலகம், பயணிகள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வாயில் அமையவுள்ள இடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
1-வது பிளாட்பாரம் முழுதும் இடிக்கப்படவுள்ளதால் அதையும் பார்வையிட்டதோடு, இந்த பணிகளை ஏப்ரல் முதல்வாரத்தில் தொடங்க அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது, காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் நீலமேகன் உடனிருந்தார்.