காட்பாடி கல்வியல் கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேராசிரியர்கள்.
காட்பாடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேராசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
- ஊதியம் உயர்த்தி வழங்க வலியுறுத்தல்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வேலூர்:
காட்பாடி காந்திநகரில் உள்ள அரசு கல்வியியல் கல்லூரி வளாகத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் அன்பழகன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜயரங்கன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், இளங்கலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.12-ம், முதுகலை விடைத்தாள் திருத்துவதற்கு ரூ.15-ம் வழங்கும் நிலை உள்ளது. இதை மாற்றி உயர்த்தி வழங்க வேண்டும். பேராசிரியர்கள் விடைத்தாள் திருத்தம் செய்யும்போது தேநீர், மற்றும் பிஸ்கெட் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும். திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை சார்ந்த பணிகளை செய்யும்போது அதற்கான பணப்பயனை அன்றே தங்கள் கைகளில் கொடுப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது எங்கள் வங்கி கணக்கில் செலுத்துகிறோம் என்று அதை முறையாக கொடுப்பது கிடையாது. எனவே பழைய முறைப்படி பணி முடிந்தவுடன் எங்களுக்கு பணப்பயன் வழங்க வேண்டும்.
முறையாக பேராசிரியர்கள் பணி மூப்பு பட்டியல் தயாரித்து பல்கலைக்கழக சார்ந்த பணிகள் வழங்கப்பட வேண்டும்.
பல மாணவ- மாணவிகள் உரிய நேரத்தில் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இந்த அவல நிலையை போக்கி மாணவ- மாணவிகள் படித்து முடித்த உடனே தங்களது சான்றிதழ்களை பெற்றுக் கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.