அரசு போக்குவரத்து பணிமனையில் பணி ஒதுக்கீடு செய்ய லஞ்சம் கேட்ட அதிகாரி சஸ்பெண்டு
- ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது
- அதிகாரி விசாரணை நடத்தினார்
வேலூர்:
திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அரசு போக்குவரத்து பணிமனை அங்குள்ள வீட்டு வசதிய வாரிய குடியிருப்பு அருகே செயல்பட்டு வருகிறது.
இந்த பணிமனையில் இருந்து 50-க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் மற்றும் நீண்ட தூர பஸ்கள் இயக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த பணிமனையில் பணிபுரியும் தலைமை அதிகாரி ஒருவர் சக அதிகாரி பணி ஒதுக்கீடு செய்வதற்காக லஞ்சம் கேட்டு போனில் பேசியுள்ளார்.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த ஆடியோவில் பணி ஒதுக்கீடு செய்ய பணம் தருமாறு தலைமை அதிகாரி கேட்பதும் அதற்கு பணி ஒதுக்கீடு பெற்ற அதிகாரி மறுப்பு தெரிவிப்பதும் என அவர்களுக்கிடையே வாக்குவாதம் செய்தது பதிவாகி இருந்தது.
இந்த ஆடியோ விவரம் தொடர்பாக வேலூர் போக்குவரத்து மண்டல பொதுமேலாளர் உடனடியாக விசாரணை நடத்தினார். ஆடியோவில் பேசும் தங்கராஜ் என்பது தெரியவந்தது. இதையடுத்து தங்கராஜை சஸ்பெண்டு செய்து பொது மேலாளர் இன்று உத்தரவிட்டார்.