உள்ளூர் செய்திகள்

அரியூரில் ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையம்

Published On 2022-11-19 08:12 GMT   |   Update On 2022-11-19 08:12 GMT
  • கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு
  • மார்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை

வேலூர்:

அரியூரில் ரூ.2.50 கோடியில் அறிவுசார் மையம் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டுமான பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேலூரை அடுத்த அரியூரில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டு வருகிறது. இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று திடீர் ஆய்வு செய்தார். நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கட்டிட பணிகள் தரமாக இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். ஆய்வின்போது மாநகராட்சி நகர்நல அலுவலர் முருகன் (பொறுப்பு), இளநிலை உதவி பொறியாளர் செல்வராஜ், கவுன்சிலர் கணேஷ்சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவு பெறும் இடமாக அமைய இந்த அறிவுசார் மையம் கட்டப்படுகிறது. நூலகம் போன்று செயல்படும். இங்கு புத்தகங்கள் படிக்க வைக்கப்படும். மேலும் ஆன்லைன் மூலம் புத்தகங்கள் படிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதுதவிர தொழில்நுட்பங்களும் இடம்பெறும். போட்டித்தேர்வுகளுக்கு தயார்படுத்துபவர்களும் உதவியாக அமைய உள்ளது.

அரியூரில் அமைக்கப்படுவதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவார்கள். கட்டிட பணிகள் வருகிற ஜனவரி மாதத்துக்குள் முடிக்கவும், இதர தொழில்நுட்ப பணிகள் முடிக்கப்பட்டு மார்ச் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News