குடியாத்தம் நகர மன்ற கூட்டம் தலைவர் சவுந்தரராசன் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம்.
குடியாத்தத்தில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்
- கால்வாய்கள் தூர் எடுக்காததால் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது.
- நகர மன்ற கூட்டத்தில் தலைவர் சவுந்தரராசன் தகவல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஏராளமான வெறிநாய்கள் உள்ளதாகவும் பல பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெறிநாய்கள் கடித்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர் இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளதால் உடனடியாக வெறி நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் எடுக்காததால் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது.
கவுண்டன்யமகாநதி ஆற்றில் குப்பைகள் கொட்டுகின்றனர் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் வராததால் குப்பைகள் தேங்கியுள்ளதாக உறுப்பினர்கள் கூறினார்கள் மேலும் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் குறித்து விரிவான பட்டியல் வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் நகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவரும் என உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.
உறுப்பினர்களின் கோரிக்கைக்கு நகர்மன்றத் தலைவர் சவுந்தரராஜன் பதிலளித்து பேசுகையில் வெறி நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கழிவுநீர் கால்வாய்களில் துர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
குடியாத்தம் நகராட்சி 27 வது வார்டு அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் சிட்டிபாபு தனது வார்டில் குப்பைகள் சரிவர எடுப்பதில்லை எனக் கூறி குப்பை கூடையுடன் நகராட்சிக்கு வருகை தந்தார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.