வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் கைது செய்யப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.
ரூ.1.46 கோடி மோசடி பணத்தில் சொகுசு கார், வீடு கட்டி, பெங்களூரூ அழகிகளுடன் உல்லாசம்
- பலே கில்லாடி வாலிபர் உள்பட 3 பேர் கைது
- வேலூரில் ஏற்றுமதி நிறுவன ஏஜெண்டாக செயல்பட்டு பணத்தை சுருட்டினர்
வேலூர்:
அரியானா மாநிலம் குரு நகரை சேர்ந்தவர் ரவிகாந்லட்சுமணண் ராவ். இவர் ஆன்லைன் மூலம் காய்கறி பழங்கள் வர்த்தகம் செய்யும் தனியார் நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
பணம் மோசடி
இவரிடம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை கிராமத்தை சேர்ந்த சீதாராம் (வயது 32) என்பவர் தான் காய்கறிகள் ஏற்றுமதி செய்யும் ஏஜெண்டாக உள்ளேன் என்று அறிமுகம் செய்து கொண்டார்.
இதையடுத்து ரூ.70 லட்சத்திற்கு வியாபாரம் செய்தார். அதற்கான பணத்தையும் திருப்பி செலுத்தினார்.
தொடர்ந்து ரூ.1 கோடி 80 லட்சத்திற்கு பணம் பெற்று வியாபாரம் செய்தார்.
ஆனால் அதற்கான பணத்தை அவர் திருப்பிக் கொடுக்கவில்லை. தொடர்ந்து தனியார் நிறுவனம் கேட்கவே ரூ.70 லட்சம் கொடுத்தார்.
தனியார் நிறுவனத்திடம் பெற்ற பணத்தை குடியாத்தம் சீவூர் கிராமத்தை சேர்ந்த சதீஷ்குமார் (28), அகரம்சேரி கிராமத்தை சேர்ந்த சரவணன் (26), குடியாத்தத்தை சேர்ந்த வசந்தகுமார் (26) ஆகியோரது வங்கி கணக்கு மூலம் பெற்றார்.
தொடர்ந்து தனியார் நிறுவனத்துக்கு ரூ.1 கோடியே 10 லட்சம் பணம் செலுத்தியதாக சீதாராம் போலி ஆவணங்கள் தயாரித்து உள்ளார்.
அழகிகளுடன் உல்லாசம்
இதையடுத்து 3 பேரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை சீதாராம் தனது மனைவி விஜிதாவின் வங்கி கணக்கிற்கு மாற்றினார். பணத்தை பெற்றுக் கொண்ட சீதாராம் ஆடம்பர கார், வேன் வாங்கினார். மேலும் அகரம்சேரியில் நிலம் வாங்கி வீடு கட்டினார்.
அவர் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை செலவு செய்து பெங்களூரு அழகிகளை வேலூருக்கு வரவழைத்தார். அவர்களுடன் மது குடித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதேபோல அந்த தனியார் நிறுவனத்தில் ஏஜெண்டாக உள்ள திருவண்ணாமலையை சேர்ந்த சரண்ராஜ் என்பவர் ரூ.36 லட்சம் செலுத்த வேண்டி இருந்தது. அதற்கும் சீதாராம் போலி பில் தயாரித்து பணத்தை நிறுவனத்திற்கு கொடுக்காமல் செலவு செய்துள்ளார். இதற்கு சரண்ராஜ் உடந்தையாக இருந்தார்.
நிறுவனத்தில் சேர வேண்டிய பணம் வராததால் நிறுவனத்தினர் சோதனை செய்தனர். அப்போது போலி ஆவணங்கள் தயாரித்து சீதாராம் மோசடி செய்தது தெரியவந்தது. தொடர்ந்து இதுகுறித்து ரவிகாந்த் லட்சுமணண்ராவ் வேலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார்.
3 பேர் கைது
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பண மோசடி செய்த சீதாராம் அவருக்கு உடந்தையாக இருந்த சதீஷ்குமார், சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் வசந்தகுமார், சரண்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர். சீதாராமின் மனைவியும் இதில் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு பிரசவம் நடைபெற்றுள்ளது. அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கையில் போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.
மோசடி செய்த பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்த சீதாராம் தனது மனைவியின் பிரசவத்திற்காக வாங்கிய வேனை அடமானம் வைத்து சிகிச்சைக்கு பணம் அனுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.