உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

Published On 2022-12-31 09:25 GMT   |   Update On 2022-12-31 09:25 GMT
  • ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடக்கிறது
  • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர்:

முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் காட்பாடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

விளையாட்டு போட்டி

கூட்டத்தில் கலெக்டர் குமரவேல் பாண்டியன் பேசியதாவது;

44 -ஆவது சதுரங்க ஒலிம்பியாட் நிறைவு விழாவின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின், ஒலிம்பிக் விளையாட்டுகள், கபடி, சிலம்பாட்டம் ஆகிய பாரம்பரிய விளையாட்டு களுக்காக மாநிலம், மாவட்ட அளவில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என அறிவித்தாா்.

அதன்படி, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் முதல் அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

42 போட்டிகள் மாவட்ட அளவிலும், 8 போட்டிகள் மண்டல அளவிலும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படும். இந்த 50 போட்டிகளுக்கும் மாநில அளவிலான இறுதிப் போட்டிகள் மே மாதம் நடத்தப்பட உள்ளன.

பள்ளிகளில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், வீரா்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்தப் போட்டிகள் மூலம் சிறந்த வீரா்கள் தோ்வு செய்யப்பட்டு, மாவட்டத்தின் அணி உருவாக்கப்படும்.

மாவட்ட அணிகள், மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பெறும். மாநில போட்டிகளுக்காக ஒவ்வொரு மாவட்ட அணிக்கும் தனியாக சீருடை, பயணச் செலவு, தங்குமிடம், உணவு ஆகியன வழங்கப்படும்.

மாநிலப் போட்டிகளின் நிறைவு விழா முதல் அமைச்சர் தலைமையில் நடைபெறும்.முதல் 3 இடங்கள் பெரும் மாவட்டங்களுக்கு முதல்அமைச்சா் கோப்பை வழங்கப்படும்.

விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட விளையாட்டு அலுவலா் நொய்லின்ஜான், கல்லூரி கல்வி இணை இயக்குநா் காவேரியம்மாள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News