வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
மாட்டுவண்டி தொழிலாளர்கள் போராட்டம்
- பசுமை தீர்ப்பாயம் உத்தரவுகளை செயல்படுத்தவில்லை என குற்றச்சாட்டு
- நெற்றியில் நாமம் போட்டு நூதனம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மாட்டு வண்டி தொழிலாளர்கள் இன்று காலை மாட்டு வண்டிகள் மற்றும் நெற்றியில் நாமம் போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மணல் குவாரிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ள அனுமதிக்க கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
மணல் குவாரிகளில் இருந்து தினசரி 800 லாரிகளில் 3 ஆயிரம் யூனிட்டுக்கு மேலாக மணல் அள்ளப்படுகிறது பசுமை தீர்ப்பாயம் மற்றும் கோர்ட்டு உத்தரவுகளை இதில் மதிக்கவில்லை.
மாட்டு வண்டிகளுக்கு மணல் எடுக்க அனுமதி அட்டை வழங்க 3 மாதங்களாக சென்னை, விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் அரசு அதிகாரிகளை பலமுறை நேரில் சந்தித்து மனு கொடுத்தும் இதுவரை அனுமதி அட்டை வழங்கவில்லை. மாட்டு வண்டியில் மணல் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.