பி.எஸ்.என்.எல். 4 ஜி திட்டத்தில் செல்போன் கவரேஜ்
- ஜவ்வாது மலை கிராமங்களில் மாணவர்கள் பயனடைவார்கள்
- அண்ணாதுரை எம்.பி. பேச்சு
வேலூர்:
பி.எஸ்.என்.எல் வேலூர் தொலைதொடர்பு வணிகப்பகுதியின்2022-23 நிதி ஆண்டிற்கான முதல் தொலைபேசி ஆலோசனை குழு கூட்டம் நடந்தது. வேலூர் தொலைபேசி ஆலோசனைக் குழுவின் இணைத் தலைவர் அண்ணாதுரை எம்.பி. தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
வேலூர் பி.எஸ்.என்.எல் 66 சதவீத ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற்ற போதிலும் கொரோனா காலத்தில் தொலைதொடர்பு சேவைகளை பராமரிப்பதில் ஊழியர்களின் முயற்சிகள் நன்றாக இருந்தது.
தொலைதொடர்பு துறை ஒரு முக்கியமான துறை பி.எஸ்.என்.எல்-க்கு அளிக்கப்பட்ட மறுமலர்ச்சி தொகுப்பை வரவேற்கிறேன்.
கிராமப்புறம் மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் தொடர்பான நாடாளுமன்றத்தின் நிலை குழுவில் நான் இருக்கிறேன். தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தொலைத்தொடர்பு முக்கிய பங்காற்று இருக்கிறது.
தற்போது மொபைல் கவரேஜ் இல்லாத தொலைதூர மற்றும் கிராமப்புறங்களில் 4 ஜி மொபைல் செயலிகளை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் சாச்சுரேஷன் திட்டத்தை வரவேற்கிறேன். திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜவ்வாது மலை பகுதியில் போன் கவரேஜ் பெற உள்ளது. இதன் மூலம் குக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெ றுவார்கள். பி.எஸ்.என்.எல்.க்கு இலவசமாக மாநில அரசு மூலமாக நிலம் ஒதுக்கீடு செய்வதற்கான அதிகபட்ச உதவி அளிக்கப்படும்.
பிஎஸ்என்எல் நம்பர் ஒன் தொலைத்தொடர்பு நிறுவனமாக மாறும். அனைத்து கிராம மக்களுக்கும் பிஎஸ்என்எல் சேவைகள் பயனளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிஎஸ்என்எல் முதன்மை பொதுமேலாளர் ஸ்ரீகுமார், துணை பொது மேலாளர்கள் சிவராமன், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.