மேளம் அடிக்கும் தொழிலாளிக்கு பாட்டில் குத்து
- வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது
- போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
வேலூர்:
வேலூர், காகிதப்பட்டறை, நைனியப்பன் தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது18). மேளம் அடிக்கும் தொழிலாளி.
இவர் தற்போது சத்துவாச்சாரி வ. உ.சி நகரில் வசித்து வருகிறார். காகிதப்பட்டறையில் தற்போது ஆடி மாத திருவிழா நடைபெறுகிறது. இதனால் காப்பு கட்டிக் கொள்ள நேற்று இரவு ஆகாஷ் காகிதப்பட்டறை வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). ராஜேஷுக்கும், ஆகாசுக்கும் இடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த ராஜேஷ் பீர் பாட்டிலை உடைத்து ஆகாஷ் இடுப்புக்கு கீழே சரமாரியாக குத்தினார்.
இதில் படுகாயம் அடைந்து ஆகாஷூக்கு ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆகாஷ் மீது 3 திருட்டு வழக்குகள் மற்றும் வீட்டில் கஞ்சா செடி வளர்த்த வழக்கு ஒன்றும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.