பட்டப் பகலில் வீடு புகுந்து நகை திருடிய பெங்களூர் வாலிபர் கைது
- கேமரா உதவியால் 24 மணி நேரத்தில் சிக்கினார்
- நகைகள் பறிமுதல்
வேலூர்:
வேலூர் சித்தேரியை சேர்ந்தவர் ரமேஷ் பாபு (வயது 49) தனியா நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கணியம்பாடியில் உள்ள ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று கணவன் மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு பணிக்கு சென்று விட்டனர்.
இதனை பயன்படுத்திக் கொண்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.அங்கு இருந்த 10.75 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.
பணி முடிந்து வீடு திரும்பிய ரமேஷ் பாபு வீட்டில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கொள்ளை நடந்த வீட்டின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் மற்றும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் ரமேஷ் பாபுவின் வீட்டுக்குள் சென்று விட்டு வெளியே செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த வாலிபர் படத்தை வைத்து விசாரித்த போது அவர் பெங்களூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் வினோத்(வயது 36)என்பது தெரியவந்தது.
இவர் திருட்டு வழக்குகளில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.கடந்த மாதம் வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலை ஆனார்.
பெங்களூருக்கு சென்றிருந்த வினோத் கொள்ளை அடிக்கும் நோக்கத்தில் நேற்று முன்தினம் வேலூர் வந்தார்.சித்தேரி பகுதியில் வீடுகளை நோட்டமிட்டு சென்றுள்ளார். அப்போது ரமேஷ் பாபு வீடு பூட்டி கிடந்தது.
இதனால் வினோத் வீட்டின் பூட்டு உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த 10.75 பவுன் தங்க நகை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து வினோத்தை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கொள்ளை நடந்த 24 மணி நேரத்தில் கொள்ளையனை கைது செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.