கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்.
அரசு பள்ளியில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
- 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியம் , பீஞ்சமந்தை ஊராட்சிக்கு
உட்பட்ட குண்ராணி மலைகிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் கல்வி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் ஓட்டப் பந்தயம் நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் குமரன், குண்ராணி தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமை தாங்கினார். ஜார்த்தான் கொல்லை ஊராட்சி மன்ற தலைவர் லதா ராஜசேகர், பீஞ்சமந்தை ஊராட்சி மன்ற தலைவர் ரேகா ஆனந்தன், மலையாளி பேரவை சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பீஞ்சமந்தை உயர் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோபி வரவேற்றார்.
வட்டார கல்வி மேற்பார்வையாளர்கள் மகேஸ்வரி, கங்கா கவுரி, சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, ரோட்டரி ஆளுநர் பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினர். இதில் பிஞ்சமந்தை, ஜார்த்தான் கொள்ளை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஓடினர். குண்ராணி தொடக்கப்பள்ளியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டம் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பீஞ்சமந்தை அரசு உயர்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. மாரத்தானில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.