உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளி கட்டிடத்தில் ஏறி ரகளை செய்த மாணவர் கீழே விழுந்து படுகாயம்

Published On 2022-07-21 15:26 IST   |   Update On 2022-07-21 15:26:00 IST
  • மாணவிகள் ஆசிரியர்களை கேலி செய்வதாக குற்றச் சாட்டு
  • போலீசாரை கண்டதும் வாலிபர்கள் ஓட்டம்

வேலுார்:

வேலுார் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 800 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி வளாகத்தில் அத்துமீறி நுழையும் புள்ளீங்கோக்கள், மாணவிகள் ஆசிரியர் களை கேலி, கிண்டல் செய்வதையும் வழக்கமாக கொண்டிருப்பதாக குற்றச் சாட்டு உள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில், இந்த பள்ளியின் சுற்றுச்சுவரை தாண்டி, கட்டிடத்துக்கு மேல் ஏறி நின்று 5 வாலிபர்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாகாயம் போலீசார், அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டதும், வாலிபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

பின்னர், மதிய உணவு இடைவேளையின்போது, மீண்டும் மாணவிகளுக்கு தொந்தரவு அளிக்கும் செயலில் வாலிபர்கள் சிலர் ஈடுபட்டனர். இதை கவனித்த சில ஆசிரியர்கள், போலீசில் புகார் அளிப்பதாக எச்சரிக்கை விடுத்ததும், கட்டிடத்தின் மீது எகிறி குதித்து தப்பியோடினர்.

இதில் ஒருவர் மட்டும் தவறி விழுந்ததில் கை முறிந்தது. அங்கு தொடர்ந்து, சென்ற போலீசார் காயமடைந்தவரை மீட்டு, அடுக் கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், அவர் இதே பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் தொரப்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவன் என்பதும், கடந்த ஒருமாதமாக பள்ளிக்கு வரவில்லை என்பதும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தால், பள்ளி வளாகத்தில் நேற்று திடீர் பரபரப்பு நிலவியது.

பள்ளி வேலை நேரத்தில், அத்துமீறி நுழையும் வாலிபர்களால் மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

Tags:    

Similar News