உள்ளூர் செய்திகள்
அரசு பள்ளியில் சாரை பாம்பு புகுந்ததால் பரபரப்பு
- தீயணைப்பு துறையினர் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை சுமார் 1500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை சைக்கிள்கள் உள்ள அறையை சுத்தம் செய்ய ஊழியர்கள் சென்றுள்ளனர்.
அப்போது, சுமார் 10 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. இதனை கவனித்த பள்ளி மாணவர்கள் உடனே தலைமை ஆசிரியரிடம் கூறினர். பின்னர் தலைமை ஆசிரியர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சாரை பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட பாம்பை வனச்சரகர் அலுவலர் இந்து உத்தரவின் பேரில் அருகே உள்ள பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.