போடிப்பேட்டை கிராமத்தில் இரவு நேரத்தில் குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பு.
குடியிருப்புக்குள் புகுந்த 7 அடி நீள மலைப்பாம்பு
- தகவல் தெரிவித்தும் வனத்துறை அதிகாரிகள் வரவில்லை
- பொதுமக்களே பிடித்து காட்டில் விட்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள போடிப்பேட்டை கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதேப்பகுதியில் கோழி இறைச்சிக்கடை ஒன்று உள்ளது.
அப்போது சுமார் இரவு 9 மணி அளவில் மலைப்பாம்பு ஒன்று இறைச்சியை சாப்பிட கடையை நோக்கி வந்துள்ளது. திடீரென அதனைப்பார்த்த கடையின் உரிமையாளர் பாம்பு, பாம்பு என கூச்சலிட்டுள்ளார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஒடுகத்தூர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் வனத்துறை அதிகாரிகள் நாங்கள் வர முடியாது நீங்களே பிடித்து காட்டில் விட்டு விடுங்கள் என சாமர்த்தியமாக கூறியுள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து சுமார் 7 அடி நீளமுள்ள மலைப்பாம்பை பிடித்து சாக்கு பையில் அடைத்து அருகே இருந்த காப்புக்காட்டில் பத்திரமாக விட்டனர். இரவு நேரத்தில் ஊருக்குள் 7 அடி நீளமுடைய மலைப்பாம்பு புகுந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.