உள்ளூர் செய்திகள்

போலீசில் புகார் அளிக்க வந்தவர்களை படத்தில் காணலாம்.

5 குடும்பத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு

Published On 2023-07-31 14:25 IST   |   Update On 2023-07-31 14:25:00 IST
  • நாட்டாமை மீது போலீசில் புகார்
  • கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு

அணைக்கட்டு:

அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் அடுத்த பிஞ்சமந்தை மலைகிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த மலை கிராமத்தை சேர்ந்த முத்து, பொன்னுசாமி ஆகிய 2 பேர் கொலை வழக்கில், கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு ஜெயிலில் தண்டனை அனுபவித்து வந்தனர்.

வழக்கின் விசாரணை முடிவில் 2 பேரும் நிரபராதிகள் என கோர்ட் தீர்ப்பளித்து விடுதலை செய்தது.

ஜெயிலுக்கு சென்று வந்ததால் இந்த 2 பேர் உறவினர்கள் உள்பட 5 குடும்பங்களை சேர்ந்த 20 பேரை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக, பீஞ்சமந்தை நாட்டாமை தீர்ப்பு வழங்கினார்.

ஊரில் சேர்த்துக் கொள்ள வேண்டு மென்றால் குடும்பத்திற்கு ஒன்றரை லட்சம் வீதம் பஞ்சாயத்துக்கு அபராதம் கட்டிவிட்டு நீங்கள் ஊரில் இருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

பணம் தர வசதி இல்லாததால் முத்து மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட உறவினர்கள் 5 குடும்ப த்தைச் சார்ந்த சுமார் 20 பேர் ஊரை காலி செய்து, சொந்த நிலத்தில் வீடு கட்டி கடந்த 6 ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பழனி மற்றும் பொன்னுசாமி உள்ளிட்ட 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வேப்பங்குப்பம் போலீசில் நேற்று புகார் மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 6 வருடமாக ஊருக்குள் அனுமதிக்காமல் பணத்தைக் கேட்டு (ஊரான்) நாட்டாமை பழனி மிரட்டி வருகிறார். நாங்கள் செல்லும் வழியில் கொடிய முள்ளை போட்டும் வழிமறிப்பதோடு, குடிநீர் குழாய்களை உடைத்தும், கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுத்தும் துன்புறுத்தி வருகிறார். பணம் கேட்டு மிரட்டும் நாட்டாமையை கைது செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜவ்வாது மலைத்தொடர்களில் வாழும் சுமார் 120 மலை கிராமங்களில் இதுவரை ஊரானுக்கு எதிராக எந்தவித புகாரும் போலீசில் கொடுத்ததில்லை என்பது வரலாறாக உள்ளது. இந்த நிலையில் தற்போது முதன்முறையாக மலைவாழ் மக்களே, ஊரானுக்கு எதிராக புகார் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News