சென்னைக்கு கடத்திய 33 மூட்டை குட்கா பறிமுதல்
- காட்பாடி ரெயிலில் 24 கிலோ கஞ்சா சிக்கியது
- போலீசார் விசாரணை
வேலூர்:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். பள்ளிகொண்டா பகுதியில் நடத்தப்படும் சோதனை காரணமாக அந்த வழியாக கடத்தல் குறைந்துள்ளது.
இந்த நிலையில் ஆலங்காயம், அணைக்கட்டு ரோடு வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசார் வேலூர் அருகே உள்ள அரியூர் ரெண்டேரி கொடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில் 33 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தன.
அதனை வேனுடன் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தி வந்த 2 பேரை அரியூர் போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அதில் சீட்டுக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த 24 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.