கைதானவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட காரையும் படத்தில் காணலாம்.
பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
வேலூர் டாக்டர்கள் வீடுகளில் கொள்ளையடித்த 2 பேர் கைது
- டாக்டர் ஸ்டிக்கர் ஒட்டிய காரில் வலம் வந்து நோட்டம்
- தந்தை வழியில் திருடிய சகோதரர்கள்- பரபரப்பு
வேலூர், ஆக.23-
வேலூர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்ணன் (வயது 52). இவர் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டை உடைத்து சுமார் 22 பவுன் தங்க நகைகள், ரூ.15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதே போல சத்துவாச்சாரி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த மற்றொரு டாக்டர் வீட்டில் அமெரிக்க டாலர்கள் உட்பட நகை பணம் கொள்ளையடிக்கபட்டது.
இது தொடர்பாக வேலூர் தெற்கு மற்றும் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். கொள்ளையர்களை கண்டுபிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் வேலூர் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு தலைமையிலான 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு தனிப்படை போலீசார் தேர்தல் வேட்டையை தொடங்கினர்.
வேலப்பாடி டாக்டர் வீட்டில் அருகே ஒரு கார் வந்து சென்றது தெரிய வந்தது. அந்த கார் மூலம் காரில் கொள்ளையர்கள் வந்து சென்றதை தனிப்படையினர் உறுதி செய்தனர்.
தனிப்படையினர் கடந்த ஒரு மாதமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் வந்த கொள்ளையர்கள் தனிப்படை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மொய்தீன் (வயது 33), அவரது தம்பி ஷாஜகான் (28) என்பது தெரிய வந்தது.2 பேரையும் கைது செய்தனர்.
அண்ணன்- தம்பிகள் தொடர் திருட்டில் இவர்கள் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சகோதரர்களின் தந்தையும் பல திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். அதே வழியில் மகன்களும் திருட்டில் ஈடுபட்டு வந்தனர்.இதுவரை 20-க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையடித்த பணத்தை வைத்து,ஓ.எல்.எகஸ். மூலம் ஒரு காரை வாங்கினர். அதில் டாக்டர் அடையாள ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு வலம் வந்துள்ளனர்.
வேலூரில் கொள்ளையடிக்க திட்டமிட்ட இவர்கள் ஆற்காடு டவுன் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தனர். அங்கிருந்து தினமும் வேலூர் வந்து டாக்டர்கள் வீடுகளை குறிவைத்து நோட்டமிட்டுள்ளனர். பின்னர் ஆளில்லாத வீடுகளில் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
அவர்களிடமிருந்து ரூ.2500 அமெரிக்க டாலர் உட்பட ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம், 2.5 பவுன் நகை, ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.