உள்ளூர் செய்திகள்

திருவையாறு கடைத்தெரு பகுதியில் ஸ்தம்பித்து நிற்கும் வாகனங்கள்.

திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பிக்கும் வாகனங்கள்- மக்கள் அவதி

Published On 2022-10-14 09:12 GMT   |   Update On 2022-10-14 09:12 GMT
  • திருவையாறு பகுதி சாலைகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
  • மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாக போக்குவரத்து சரிசெய்ய வேண்டியது அவசியம்.

திருவையாறு:

திருவையாறு நகரத்தில் தேசிய- மாநில நெடுஞ்சாலையும் இணைந்து அமைந்துள்ளது.

இதனால், உள் மாவட்டத்திலிருந்தும் வெளி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக உள்ளது. மேலும்,

உள் வட்டார மணல் குவாரி மற்றும் செங்கல் காலவாய்களிலிருந்தும் மணல் மற்றும் செங்கல் ஏற்றிய கனரக லாரிகளும் அதிகமாக ஓடிக் கொண்டிரு.கின்றன. அனைத்து வகையான வாகனங்களும் காலையிலிருந்து இரவு வரையில் இடைவெளியில்லாமல் பயணிப்பதால் திருவையாறு நகரம் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாகவே உள்ளது.

இதனால், பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாயிலிருந்தும் கல்லணை பூம்புகார் மாநில நெடுஞ்சாலையிலிருந்தும் ஒரே நேரத்தில் திருவையாறு நகருக்குள் வாகனங்கள் பயணிக்கும் போது திருவையாறு சாலைகளில் சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஸ்தம்பிக்கும் நிலையே தொடர்ந்து காணப்படுகிறது.

இன்னும் சில நாட்களில் தீபாவளிப் பண்டிகை முன்னிட்டு போக்குவரத்து வாகனங்களை மாற்று வழியில் செல்ல அறிவுறுத்த வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.

சாலையில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை அனுசரித்தும், ஆம்புலன்சுகள் முதலிய அவசர கால ஊர்திகள் போக்குவரத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டும் இச்சாலையருகே அமைந்துள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களின் பாடவகுப்புகளுக்கு இடையூறாக அமையும் வாகன இரைச்சல்களை கட்டுப்படுத்தவும், மாணவர்கள் பாதுகாப்பாக பயணிக்க ஏதுவாகவும் போக்குவரத்து சரிசெய்யப்பட வேண்டியது அவசியமாகிறது.

எனவே, திருவையாறு நகரச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக உள்ள சாலையோர தரைக் கடைகளையும் தள்ளுவண்டிக் கடைகளையும் உடனடியாக அப்புறப்படுத்தவும், நெருக்கடியான கடைத்தெருச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடைசெய்தும் திருவையாறில் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கிறார்கள்.

Tags:    

Similar News