வைகை அணை (கோப்பு படம்)
3 மாதங்களுக்கு பிறகு 50 அடியை எட்டிய வைகை அணை -ரூ.200 கோடியில் தூர்வார முடிவு
- நீர்வரத்து 915 கனஅடியாக நேற்று இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியை எட்டியது.
- முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.75 அடியாக உள்ளது.
ஆண்டிபட்டி:
தென்மேற்குபருவமழை தொடங்கி 3 மாதங்கள் ஆன நிலையில் தேனி மாவட்டத்தில் போதுமான மழை பெய்யவில்லை. கோடையை போல வறுத்தெடுத்த வெயிலால் பெரும்பாலான அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது.
இதனால் 71 அடி உயரம் உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அடியோடு நின்றது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் சரிந்துகொண்டே சென்றது. அணையில் போதிய நீர்இருப்பு இல்லாத காரணத்தால் வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் தண்ணீர் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. வைகைஅணையிலிருந்து மதுரை , சேடபட்டி, ஆண்டிபட்டி, தேனி, பெரியகுளம் பகுதி குடிநீர் தேவைக்காக மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
வைகை அணையில் நீர்வரத்து என்பது பெரும்பாலும் முல்லைபெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவை பொறுத்தே இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது. இதனால் முல்லைபெரியாறு அணையிலிருந்து 1200 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இதன்காரணமாக வைகை அணையின் நீர்வரத்து 915 கனஅடியாக நேற்று இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் 50 அடியை எட்டியது.
இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் மகிழச்சி அடைந்துள்ளனர். இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.03 அடியாக உள்ளது. வரத்து 823 கனஅடி, திறப்பு 69 கனஅடி, நீர்இருப்பு 1996 மி.ககனஅடியாக உள்ளது.
முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.75 அடி, வரத்து 1104 கனஅடி, திறப்பு 1200 கனஅடி, இருப்பு 2975 மி.கனஅடி.
1956-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜரால் கட்டப்பட்ட வைகை அணை 72 உயரமும், 21.2 கி.மீ சுற்றளவும் கொண்டது. அணையில் அதிகபட்சமாக 71 அடிவரை மட்டுமே தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. ஆனால் 15 அடிக்குமேல் சேரும், சகதியுமாக இருப்பதால் தண்ணீர் தேங்கும் கொள்ளளவு மிகவும் குறைவாக உள்ளது. 67 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த அணை இதுவரை தூர்வாரப்படவில்லை. இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ரூ.200 கோடி மதிப்பில் அணையை தூர்வார திட்டமிட்டுள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
இந்தபணி விரைவில் மேற்கொள்ளும்பட்சத்தில் அணையில் கூடுதல் தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.