உள்ளூர் செய்திகள்

பருவம் தவறி மழை: 2 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்து சேதம்- விவசாயிகள் கண்ணீர்

Published On 2025-01-21 10:57 IST   |   Update On 2025-01-21 10:57:00 IST
  • அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது.
  • விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 26 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்திருந்தனர். இப்பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து விவசாயம் செய்திருந்தனர்.

விவசாயிகள் எதிர்பார்த்த அளவிற்கு இந்தாண்டு போதிய மழை பெய்ததால் நெற்பயிர்கள் நல்ல மகசூலை எட்டியது. இந்நிலையில் சமீபத்தில் பருவம் தவறி காற்றுடன் கூடிய மழை பெய்ததால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளது.

மேலும் சாய்ந்த நெற்கதிர்கள் நீரில் மூழ்கி முளைக்க தொடங்கியுள்ளது. ஆவுடையார்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் இரண்டாயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் நெற்கதிர்கள் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில் திடீரென பெய்த பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் முற்றிலும் சாய்ந்து சேதமாகியுள்ளது.

சாய்ந்த கதிர்கள் சுமார் 90 சதவீதம் சேதமடைத்துள்ளதால், இனி அதனை அறுவடை செய்து எந்த பயனும் இல்லை. எனவே அரசு உடனடியாக உரிய அதிகாரிகள் மூலம் பாதிப்பு குறித்து கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News