உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு

Published On 2022-12-07 15:19 IST   |   Update On 2022-12-07 15:19:00 IST
  • அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வர நடைபெறும் கலைத்திருவிழா நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது
  • மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது

திருச்சி:

அரசு பள்ளிகளில் தங்களின் பிள்ளைகளை சேர்க்கத் தயங்கும் இந்த காலகட்டத்தில் மேற்படிப்பை தொடர கல்லூரிகளில் அரசு கல்லூரி கிடைக்குமா என்ற ஏக்கம் நிறைந்து தான் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் வாழ்க்கை பயணம் தொடர்கிறது.

ஆனாலும் இந்த கொரோனா காலகட்டத்திற்கு பின் அரசு பள்ளியில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்தே காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் அரசு ஒரு புது யுத்தியை கையில் எடுத்திருக்கிறது.

அரசு பள்ளியில் படிக்கக்கூடிய அனைத்து மாணவிகளுடைய தனித்திறமையை வெளிக்கொண்டு வருவதற்கான புது முயற்சியாக கலைத்திருவிழா என்ற நிகழ்ச்சி தமிழக முழுவதும் அரசு பள்ளிகளில் ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் மூலம் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை பொருத்தவரை முதலில் பள்ளிகளில் நடைபெற்றது.

அதன் பிறகு வட்டார அளவில் ஒரு பள்ளியை தேர்வு செய்து அந்த பள்ளியில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ச்சியாக மாவட்டம், மாநிலம் என ஒவ்வொரு நிலைக்கும் வெற்றி பெற்றவர்கள் சென்று கொண்டே இருப்பார்கள்.

இந்த கலைத்திருவிழாவை பொறுத்தவரை மாணவர்கள் தங்களிடம் உள்ள எந்த திறமையாக இருந்தாலும் அதை மேடையில் வெளிப்படுத்தலாம். அதன்படி பேச்சுப்போட்டி, கவிதை போட்டி, நடன போட்டி, இசை, நாடகம், ஊமை நாடகம், நாட்டியம் என மாணவர்கள் விரும்பியவாறு அவர்களின் திறமைகளை போட்டிகளில் காட்டலாம்.

இப்படியாக நடைபெற்ற போட்டிகளில் அரசு பள்ளியில் பயிலக்கூடிய மாண,வ மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் திறமைகளை வெளிக்காட்டி உள்ளனர்.

அரசு பள்ளி மாணவர்களும் இவ்வளவு விஷயங்களை வைத்திருப்பவர்களா என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் அனைத்து போட்டிகளிலும் தங்களின் தனித்திறமையை வெகுவாகவே மெய்ப்படுத்திருக்கிறார்கள். அரசின் இந்த முயற்சிக்கு அனைத்து தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

படிப்பு மட்டுமின்றி மாணவர்கள் தங்களிடம் உள்ள தனித்திறமைகளை மேம்படுத்துவதற்கு அரசு பள்ளிகளில் முன்னெடுத்துள்ள இந்தத் திட்டம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகளின் திறனை மேம்படுத்துவதற்கு இன்னும் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்திருக்கிறது.

Tags:    

Similar News