உள்ளூர் செய்திகள்

இந்துக்களை தரக்குறைவாக பேசுவதை தி.மு.க. வாடிக்கையாக கொண்டுள்ளது - கூட்டத்தில் நடிகை விந்தியா பேச்சு

Published On 2022-09-18 09:04 GMT   |   Update On 2022-09-18 09:04 GMT
  • அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது
  • இதில் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசினார்.

திருச்சி,

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட செயலாளருமான மு.பரஞ்ஜோதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், மீனவரணி பேரூர் கண்ணதாசன், முத்துக்கருப்பன், ஜெயக்குமார், நடராஜன், ரவிசங்கர், நடேசன், மருதை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளர் நடிகை விந்தியா கலந்து கொண்டு பேசியதாவது:-

தி.மு.க. அரசு மின் கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு இப்படி பல்வேறு சுமைகளை மக்கள் மீது திணித்துள்ளார்கள். தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மாறாக மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்டி காத்து வந்தனர். தற்பொழுது அந்த இடத்தில் எடப்பாடியார் இருந்து நம்மை காத்து வருகிறார்.

தி.மு.க. நமக்கு எப்படி எதிரியோ, அதுபோல அ.தி.மு.க. அலுவலகத்தை தாக்கியவர்களையும் அப்படித்தான் நினைக்க வேண்டும். பொதுமக்களை தி.மு.க. காக்க மறந்து விட்டது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் தமிழகத்தின் முதல்வராக கொண்டுவர பாடுபட வேண்டும்.

இந்துக்களை பற்றி இழிவாக ஆ.ராசா பேசியது புதிதல்ல. இந்துக்களை தரக்குறைவாக பேசுவதை தி.மு.க. வாடிக்கையாக வைத்து உள்ளது. எனவே இவர்களுக்கு மக்கள் தகுந்த நேரத்தில் பாடம் புகட்டுவார்கள் என்று பேசினார்.

கூட்டத்தில் பகுதி செயலாளர்கள் சுந்தர்ராஜ், திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார், விஷன் பழனிச்சாமி மற்றும் திரளான கட்சியினர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News