உள்ளூர் செய்திகள்

திருச்சியில் உச்சம் தொட்ட மிளகாய் வற்றல் விலை - ரூ 180-ல் இருந்து 320-க்கு உயர்ந்தது

Published On 2022-09-24 15:54 IST   |   Update On 2022-09-24 15:54:00 IST
  • திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வர மிளகாய் (மிளகாய் வற்றல்) விலை கடுமையாக உயர்ந்துள்ளது
  • இப்போது சில தினங்களாக சில்லறை மார்க்கெட்டில் அதன் விலை ரூ.300 இருந்து 320 ஆக உயர்ந்து இருக்கிறது.

திருச்சி,

திருச்சி காந்தி மார்க்கெட் மொத்த சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வர மிளகாய் (மிளகாய் வற்றல்) விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ வர மிளகாய் ரூ.180-க்கு விற்கப்பட்டது.

இப்போது சில தினங்களாக சில்லறை மார்க்கெட்டில் அதன் விலை ரூ.300 இருந்து 320 ஆக உயர்ந்து இருக்கிறது. மொத்த சந்தையில் தரத்தின் அடிப்படையில் ரூ.250 லிருந்து ரூ.280 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் குண்டூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் வர மிளகாய் அதிகம் திருச்சி மக்களின் தேவையை பூர்த்தி செய்கிறது. சமீபத்திய மழையால் பயிர்கள் சேதம் அடைத்து உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

அது மட்டுமல்லாமல் உள்ளூர் வர மிளகாய் உற்பத்தி பரப்பளவு குறைந்ததும் இன்னொரு காரணமாக இருக்கிறது. திருச்சி மாவட்டத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை வர மிளகாய் அறுவடை சீசனாக இருக்கும். இந்த காலகட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துறையூர், தா.பேட்டை பகுதியிலிருந்து அதிகளவு வர மிளகாய் சந்தைக்கு விற்பனைக்காக ெகாண்டு வரப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சாகுபடி பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளதால் வரத்து கணிசமாக குறைந்துள்ளது.

இதனால் விலையும் கட்டுக்குள் இருந்தது. கடந்த ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து கூட அதிக அளவு வர மிளகாய் மார்க்கெட்டுக்கு வந்தது. ஆனால் தற்போது முழுமையாக ஆந்திர மாநிலத்தை நம்பியிருக்க வேண்டிய சூழல் இருப்பதால் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

பொதுவாக நாள் ஒன்றுக்கு ஆந்திராவில் இருந்து 1,000 மூட்டை வர மிளகாய் திருச்சிக்கு கொண்டுவரப்படும். ஆனால் தற்போது 500 மூட்டை மட்டுமே வருவதாக வியாபாரிகள் கூறினர்.

இப்போது வர மிளகாய் சீசன் இல்லை. இது போன்ற காலகட்டங்களில் கிலோ ஒன்றுக்கு ரூ.20 லிருந்து ரூ.30 வரை மட்டுமே விலை உயரும். ஆனால் வரத்து குறைந்துள்ளதால் விலையும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது. வரும் காலங்களில் வரத்து, விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை மாற்றம் ஏற்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News