உள்ளூர் செய்திகள்

கணிதத்தில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உடனே வேலைவாய்ப்பு - அமைச்சர் கணேசன் தகவல்

Published On 2022-11-05 09:46 GMT   |   Update On 2022-11-05 09:46 GMT
  • பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, கணிதத்தில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும்.
  • ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. அதற்காக அந்நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், திருச்சி அரியமங்கலம் எஸ்.ஐ.டி.யில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாமை, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தொழில்துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் துவக்கி வைத்து, வேலைவாய்ப்பு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர்.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை இயக்குனர் வீரராகவ ராவ், மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில், தொழில்துறை அமைச்சர் கணேசன் பேசியபோது, சட்டமன்ற மானியக் கோரிக்கையில் கையில் ஒரு பேப்பர் கூட இல்லாமல் ஒரு மணி நேரம் தொடர்ச்சியாக பேசியவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அவரின் பக்கத்தில் அமரும் வாய்ப்பை பெற்றதே பெரும் பாக்கியமாக கருதுகிறேன். காமராஜர், கருணாநிதி ஆகியோர் மதிய சத்துணவு திட்டத்தை கொடுத்தனர். ஆனால், உலகத்திலேயே பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின். ஆட்சியேற்று ஓராண்டில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொடுத்துள்ளோம்.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்று, கணிதத்தில், 60 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும். ஹெச்.சி.எல். நிறுவனத்தில் உங்களுக்கு வேலை தயாராக இருக்கிறது. அதற்காக அந்நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. தமிழகத்தில், படித்த இளைஞர்களுக்கு வேலை இல்லை என்ற நிலையை ஏற்படுத்த முதல்வர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என்றார்.

Tags:    

Similar News