உள்ளூர் செய்திகள்

திருச்சியில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது - 20 பவுன் நகைகள் மீட்பு

Published On 2022-11-12 15:27 IST   |   Update On 2022-11-12 15:27:00 IST
  • சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

திருச்சி

திருச்சி மாவட்டம் துறையூர் பைபாஸ் சாலையில் உள்ள சொரத்தூர் பிரிவு ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு சிலர் நடமாடுவதாக துறையூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து போலீசார் அங்கு சென்ற போது, 3 பேர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் துறையூர் விநாயகர் தெருவை சேர்ந்த சரனிஷ் (22), போண்டா கார்த்திக் (எ) கார்த்திக் (20), செங்காட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த பரத் (24) என்பதும், 3 பேரும் சேர்ந்து துறையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டாத்தூர், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மங்கப்பட்டி மற்றும் எரகுடி ஆகிய பகுதிகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு,திருடிய நகைகளை திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்த மூர்த்தி (36) என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சரனிஷ், பரத், கார்த்திக் மற்றும் திருட்டு நகைகளை விற்க உதவிய மூர்த்தி உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்த துறையூர் போலீசார், அவர்களிடம் இருந்து சுமார் 20 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மீட்டனர்.

மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News