உள்ளூர் செய்திகள்

மலைக்குகையில் ஆபத்தான முறையில் வசித்து வரும் பழங்குடியின மக்களை படத்தில் காணலாம்.

அரசு வழங்கிய குடியிருப்பில் இருந்து விரட்டியதால் மலைக்குகையில் ஆபத்தான முறையில் வசிக்கும் பழங்குடியின மக்கள்

Published On 2023-08-26 06:01 GMT   |   Update On 2023-08-26 06:01 GMT
  • அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.
  • மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

வருசநாடு:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வருசநாடு மலைப்பகுதியில் பழங்குடியின மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக அரசு தொகுப்பு வீடுகளை வழங்கி அவர்களுக்கு ரேசன்கார்டு வழங்கியது. ஆனால் அரசு வழங்கிய குடியிருப்புகளில் இருந்து ஒரு தரப்பினர் இவர்களை விரட்டிவிட்டுள்ளனர்.

இதனால் அந்த குடியிருப்புகளில் தங்கமுடியாமல் சுமார் 10 குடும்பத்தினர் வனப்பகுதியில் உள்ள பாறை இடுக்குகளில் வசித்து வருகின்றனர். மழை மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களை தாங்கி இவர்கள் கடும் இன்னலுக்கு நடுவில் குகையில் வசித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்த குடும்பங்களை சேர்ந்த ஆண்கள் வனப்பகுதியில் தேன் மற்றும் மூலிகைகளை சேகரித்து நகர்பகுதியில் விற்று வருகின்றனர். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் குடும்பத்திற்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

தற்போது இந்த மலைக்குகையில் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை என்ற போதிலும் 3 வேளை உணவுகூட கிடைக்கவில்லை என அவர்களின் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், அரசு எங்களுக்காக கட்டி கொடுத்த வீடுகளில் சில நாட்கள் மட்டுமே வசித்து வந்தோம். அதன்பிறகு எங்களை ஒருதரப்பினர் அடித்து விரட்டிவிட்டனர். இதனால் கடந்த 6 மாதங்களாக மலைக்குகையில்தான் வசித்து வருகிறோம். இங்கு வானமே கூரையாக எங்கள் வீடு உள்ளது. இரவு நேரங்களில் வனவிலங்குகள் தொல்லை இருப்பதால் குழந்தைகளை காப்பாற்ற தூக்கம் இல்லாமல் விலங்குகளை விரட்டி வருகிறோம்.

பகல் நேரத்தில் நாங்கள் விறகு எடுத்துவர செல்கிறோம். அதனை வைத்து உணவு சமைத்து வருகிறோம். குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு ஏதேனும் உடல்நிலை பாதிக்கப்பட்டால் கூட ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியவில்லை. வனப்பகுதியில் கிடைக்கும் மூலிகைகளை வைத்து மருத்துவம் செய்கிறோம். நாங்கள் குடியிருந்த வீடுகளில் மின்இணைப்பு கொடுக்கப்படவில்லை. இப்பகுதியை சேர்ந்த பலருக்கு ஆதார் எண் கூட கிடையாது.அதனால்தான் மின்இணைப்பு கொடுக்கமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு சாதாரண மனிதனுக்கு தேவையான உண்ணஉணவு, உடுத்த உடை, இருப்பிடம் ஆகிய 3-ம் எங்களுக்கு கேள்விக்குறியாகவே உள்ளது.

எனவே அதிகாரிகள் இப்பிரச்சினையில் உரிய நடவடிக்கை எடுத்து குடியிருப்பு வசதி மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News