உள்ளூர் செய்திகள்

ஹெல்மெட் அணிந்து சென்றவர் அம்புகுறியிட்டு காட்டப்பட்டுள்ளார்.

கோவையில் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம் விதித்த போக்குவரத்து போலீஸ்

Published On 2022-09-13 03:40 GMT   |   Update On 2022-09-13 03:40 GMT
  • கோவை நகரில் பல இடங்களில் கேமராக்கள் இல்லை.
  • போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கோவை :

கோவை நகரில் அவினாசி ரோடு மேம்பால பணிகள் நடைபெறுவதால் பல இடங்களில் கேமராக்கள் இல்லை. ஆனால் சிக்னலில் நிற்கும் போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்களை நோட்டமிட்டு அவர்கள் செல்போன்களில் வாகனங்களின் பதிவு எண்ணை பதிவு செய்து அபராதம் விதிக்கிறார்கள்.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு தெரியாமலே பின்பகுதியில் இருந்து போக்குவரத்து போலீசார் செல்போனில் எடுக்கிறார்கள்.

இந்த நிலையில் கோவை அண்ணா சிலை சிக்னல் அருகே நேற்று தனியார் நிறுவனர் ஊழியர் ஒருவர் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்றார். பின் இருக்கையில் யாரும் இல்லை. ஆனால் இரவில் அவரது செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்தது. இதனை பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார். டி.என்.99 யு 5829 என்ற இருசக்கர வாகனத்தில் சென்றவரும், பின்னால் உட்கார்ந்தவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும் தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.200 செலுத்த வேண்டும் என்றும் அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டு இருந்தது.

அவரது இருசக்கர வாகனத்தின் அருகில் சென்றவர்கள்தான் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளனர். ஒரே போட்டோவில் 2 இருசக்கர வாகனங்கள் பதிவாகி உள்ளது. தவறு செய்தவருக்கு விதிக்க வேண்டிய அபராதத்தை, போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் ஹெல்மெட் அணிந்து சென்றவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு மனஉளைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் மதிவாணனிடம் புகார் செய்யப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக துணை கமிஷனர் உறுதி அளித்தார்.

இதுபோன்ற குளறுபடிகள் நகரின் பல இடங்களிலும் நடைபெறுகிறது. மறைந்து நின்றுகொண்டு அபராதம் விதிப்பது போன்ற போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ரெயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் எப்போதும் காணப்படுகிறது. அங்கு போக்குவரத்து போலீசார் நின்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில்லை. திடீர், திடீரென்று காணாமல் போய்விடுகிறார்கள்.

இதனால் தனியார் பஸ் டிரைவர்கள் வாகனங்களை நீண்டநேரமாக நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசாரின் செயல்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஒழுங்குபடுத்தி சரியானமுறையில் செயல்படவைப்பதுடன், தவறு செய்யும் போக்குவரத்து போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News