உள்ளூர் செய்திகள்

சாலையில் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதால் காவேரிப்பட்டணத்தில் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-04-02 15:24 IST   |   Update On 2023-04-02 15:33:00 IST
  • சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளியே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.
  • சாலை ஓரமாகவே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

காவேரிப்பட்டணம்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்டணம் நகரம் திகழ்ந்து வருகிறது.

இந்த நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நகரில் ஏராளமான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றுக்கு தினமும் பல தரப்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர்.

காவேரிப்பட்டணம் நகரில் முக்கிய சாலையாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோட்டில் பூக்கடை, பழக்கடை, பூஜைக்கடை, புத்தகக்கடை, மளிகைக்கடை, பாத்திரக்கடை, செருப்புக்கடை, துணிக்கடை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்தி வரும் கடைக்காரர்கள் அவர்களின் கடைக்கு வெளியே சுமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து தங்களின் கடைக்கு வெளியே தங்கள் கடைகளை வைத்துள்ளனர்.

இதனால் பொதுமக்கள் நடைபாதையில் செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும், மேலும் அக்கடைகளுக்கு வருவோர் 2 மற்றும் 4 சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெருக்கடியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

மேலும் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகளை சாலையை ஆக்கிரமித்து ரோட்டிலேயே நிறுத்தி ஏற்றி இறக்கி விடுவதால் போக்குவரத்து நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

மேலும் காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதியாக சக்தி விநாயகர் கோவில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பிலிருந்துதான் சேலம் நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டும்.

இச்சந்திப்பில் உள்ள கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் நடைபாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பதால் இங்கு முக்கிய நான்கு ரோட்டில் உள்ள மசூதி முன்பும், சேலம் நெடுஞ்சாலையின் நெடுகிலும் சாலை ஓரமாகவே இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி செல்வதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

இது குறித்து பொதுமக்கள் கூறும்போது அங்கு பேரிகார்டுகளை வைத்து சாலையின் ஓரமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடை செய்ய வேண்டும்.

இது குறித்து காவல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் சிரமத்தை போக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

Tags:    

Similar News