உள்ளூர் செய்திகள்

பஸ் மோதியதில் உடைந்து விழுந்த போலீஸ் நிலைய ஆர்ச் வளைவு.

சுரண்டையில் ஒரு வழி பாதையில் வரும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் - தீர்வு காண பொதுமக்கள் கோரிக்கை

Published On 2022-11-23 15:32 IST   |   Update On 2022-11-23 15:32:00 IST
  • காலை,மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது.
  • சரக்கு லாரிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

சுரண்டை:

தென்காசி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகவும், தென்காசி மாவட்டத்தின் இதயமாகவும் சுரண்டை திகழ்கிறது.

சுரண்டையை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பள்ளி,கல்லூரி செல்வதற்காகவும், தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காகவும், மருத்துவ தேவைகளுக்காக வும் சுரண்டைக்கு தினமும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

சுரண்டை பஸ் நிலை யத்திற்கு ஒரு வழி பாதையில் வரும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்களால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி வாகனங்கள் வரும் பொழுது போக்குவரத்து நெரிசல் இன்னும் அதிகமாகிறது. மேலும் அண்ணா சிலை பகுதியில் வாகனங்கள் திரும்புவதற்கு சிரமமாக இருப்பதால் சங்கரன்கோவில் ரோட்டில் வரும் வாகனங்கள் சாந்தி நர்சிங் ஹோம் முன்பு உள்ள ஒரு வழி பாதையில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வருகிறது.

இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது அதிர்ஷ்டவசமாக இதுவரை உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. நேற்று காலையில் ஒரு வழி பாதையில் வந்த தனியார் பஸ் மோதியதில் சுரண்டை காவல் நிலைய ஆர்ச்(வளைவு) மீது மோதியதால் ஆர்ச் கீழே விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.எனவே சுரண்டை பஸ் நிலையம் மற்றும் அண்ணா சிலை அருகிலும் நிரந்தரமாக போலீசாரை நிறுத்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும், சுரண்டை பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் வரும் சரக்கு லாரிகளை கண்காணிக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நகராட்சி நிர்வாகமும், காவல்துறையும், வியாபாரிகளும் இணைந்து இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News