உள்ளூர் செய்திகள்

தீவுத்திடலில் வருகிற 28-ந்தேதி திட்டமிட்டபடி பொருட்காட்சியை தொடங்கலாம்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2022-12-24 02:09 GMT   |   Update On 2022-12-24 02:09 GMT
  • பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
  • ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

சென்னை

சென்னை தீவுத்திடலில் 47-வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தக பொருட்காட்சிக்கான டெண்டர் நடைமுறைகளை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பெங்களூரைச் சேர்ந்த பன் வேர்ல்டு என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அப்போது, கடந்த 2017-ம் ஆண்டு நடத்தப்பட்ட சுற்றுலா பொருட்காட்சியின்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு செலுத்த வேண்டிய ரூ.3 லட்சம் பாக்கியை செலுத்தாததால், அந்த நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து, ரூ.50 ஆயிரம் வழக்கு செலவு (அபராதம்) விதித்து வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பன் வேர்ல்டு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, டெண்டரில் வெற்றி பெற்ற நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு, பொருட்காட்சி அமைப்பதற்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும், வருகிற 28-ந்தேதி முதல் பொருட்காட்சி தொடங்கவுள்ளதாகவும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், பொருட்காட்சியை திட்டமிட்டபடி வருகிற 28-ந்தேதி தொடங்க அனுமதியளித்தனர். மனுதாரர் நிறுவனத்துக்கு தனி நீதிபதி விதித்த அபராதத்துக்கு மட்டும் தடை விதித்தனர். மேலும், இதுதொடர்பாக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற ஜனவரி 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News