அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் வர்த்தக கண்காட்சி - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
- வர்த்தக கண்காட்சி அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
- ஒரு நபருக்கு வார நாட்களில் ரூ.50, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 70 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரை அருகே அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் சார்பில் வர்த்தகக் கண்காட்சி மற்றும் பொருட்காட்சி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அதனை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.
இக்கண்காட்சி அடுத்த மாதம் 26-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் வர்த்தகம் தொடர்பான கண்காட்சி, பெண்களுக்கான அழகு சாதனப் பொருட்கள் அரங்குகள், உள்ளூர் உணவு வகைகளுக்கு தனித்தனி அரங்குகள், வெளிநாட்டுப் பறவைகள் கண்காட்சி அரங்குகள், குழந்தைகளுக்கான விளையாட்டு அரங்குகள், ராட்டிணங்கள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. இதற்கு ஒரு நபருக்கு வார நாட்களில் ரூ. 50, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ. 70 நுழைவுக்கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தொடக்க விழாவில் அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் டி.ஆர்.தமிழரசு, வர்த்தக கண்காட்சி மற்றும் பொருள்காட்சித் தலைவர் ஜி.பி. ஜோ பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.