உள்ளூர் செய்திகள்

வால்பாறையில் இரவில் வனவிலங்குகளை பார்க்க சென்ற சுற்றுலாபயணிகள்

Published On 2022-06-27 09:23 GMT   |   Update On 2022-06-27 09:23 GMT
  • வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் செல்கின்றனர்.
  • சுற்றுலா பயணிகளை இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை:

கோவை மாவட்டத்தில் மலைப்பகுதியான வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாபயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களிடம் வன விலங்குகளை காண்பிப்பதாக கூறி சில சுற்றுலா கார் டிரைவர்கள் இரவு நேரத்தில் அழைத்துச் சென்று காலையில் மீண்டும் தங்கும் விடுதிக்கு கொண்டு வந்து விடுகின்றனர்.

இதுபோன்ற செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வனத்துறை சார்பில் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு இரவு நேர டிரக்கிங் என்ற பெயரில் சுற்றுலாபயணிகளை வெளியே அனுப்பக் கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் வனத்துறையினர் இரவில் ரோந்து சென்றபோது கருமலை எஸ்டேட் பகுதி வழியாக வந்த 2 வாகனங்களை தடுத்து நிறுத்து சோதனை செய்தனர். அப்போது வன விலங்குகளை காண சுற்றுலாபயணிகளை அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இரு வாகனங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

பின்னர் வாகன டிரைவர்களான ஜீவா (வயது 29), கலையரசன் (32) ஆகியோருக்கு வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தார்.

மேலும் சுற்றுலா பயணிகளை தங்க வைத்து இரவு நேரத்தில் வெளியே அனுப்பிய அய்யர்பாடி எஸ்டேட்டில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதி உரிமையாளருக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தார். மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது.  

Tags:    

Similar News