உள்ளூர் செய்திகள்

புல்லாவெளி நீர்வீழ்ச்சி (கோப்பு படம்)

புல்லாவெளி அருவிக்கு வனத்துறை தடையை மீறி செல்லும் சுற்றுலா பயணிகள்

Published On 2022-09-24 04:42 GMT   |   Update On 2022-09-24 04:42 GMT
  • தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆபத்தான புல்லாவெளி அருவி உள்ளது.
  • வனத்துறை கட்டுப்பாட்டையும் மீறி புல்லாவெளி அருவிக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும்பாறை:

திண்டுக்கல் மாவட்டம் தாண்டிக்குடி மலைப்பகுதியில் ஆபத்தான புல்லாவெளி அருவி உள்ளது. இந்த அருவியில் 500 அடி பள்ளத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் காட்சியை பார்க்க திண்டுக்கல், தேனி, மதுரை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

குறிப்பாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் புல்லாவெளி அருவியில் நீராடிச்செல்வதையும், வழக்கமாக வைத்திருந்தனர். ஆபத்தான இந்த அருவியை காண வரும் இளைஞர்கள் மிக அருகில் சென்று செல்பி எடுக்கும் போது தவறி விழுந்து விடுகின்றனர்.

இது வரை இந்த அருவியில் சுமார் 15 பேர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள புல்லாவெளி அருவியில் உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரமக்குடியைச் சேர்ந்த வாலிபர் அருவியில் விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து புல்லாவெளி அருவிக்கு செல்ல தடை என்ற எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. தற்போது அருவியில் சற்று பாதுகாப்பு குறைபாடு இருப்பதால் அவற்றை சரி செய்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் மழை நின்ற பிறகும் அருவியில் ஆர்ப்பரித்து செல்லும் தண்ணீரை காண பல்வேறு ஊர்களில் இருந்தும் வாலிபர்கள் மோட்டார் சைக்கிள்களில் வருகின்றனர்.

இங்குள்ள ஆபத்தான கயிறு பாலத்தில் நடந்து செல்கின்றனர். வனத்துறை கட்டுப்பாட்டையும் மீறி புல்லாவெளி அருவிக்கு செல்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News