உள்ளூர் செய்திகள்

முதுமலை சரணாலயத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாபயணிகள் அவதி

Published On 2023-09-21 09:19 GMT   |   Update On 2023-09-21 09:19 GMT
  • முதுமலை வனப்பகுதிக்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
  • அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் தமிழகம், கேரளா, கர்நாடக எல்லைகளின் சந்திப்பில் முதுமலை காட்டுயிர் சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா அமைந்து உள்ளது.

இது நீலகிரி வனத்துறை சரகத்துக்கு உட்பட்ட பகுதி ஆகும். தமிழக சுற்றுலாத்துறையில் முதுமலை சரணாலயம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இங்கு காணப்படும் வித்தியாசமான உயிரினங்கள், வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம் தரும்.

முதுமலை சரணாலயத்தில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில் ஒன்று தெப்பக்காடு யானைகள் முகாம். இது மாயாற்றின் கரையில் அமைந்து உள்ளது. முதுமலை தேசிய பூங்காவில் இருந்து சிறிது தூரத்தில் உள்ளது, இது ஆசியாவில் மிகவும் பழமையான யானைகள் முகாம் ஆகும்.

கடந்த 1923-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு தற்போது 24 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு யானைகளுக்கு பயிற்சிகள் தரப்பட்டு வருகின்றன. மறுவாழ்வு மையமாகவும் செயல்படுகிறது. முதுமலை வனவிலங்கு சரணாலயத்திற்குள் மரம் எடுத்து செல்லுதல் போன்ற வனப்பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இத்தனை சிறப்புகள் மிக்க முதுமலை வனப்பகுதிக்கு தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஆனால் இங்கு அவர்களுக்கான அடிப்படைவசதிகள் போதியஅளவில் இல்லை என சுற்றுலாபயணிகள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

குறிப்பாக போதிய கழிவறை வசதிகள் இல்லை. ஒருசில கழிப்பிடங்களும் பெரும்பாலான நேரங்களில் திறக்கபடாமல் உள்ளது . எனவே வனத்துறை உடனடியாக முதுமலை சரணாலயத்தில் அடிப்படை தேவைகளை சிறப்பாக செய்து தரவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News