உள்ளூர் செய்திகள்

ஆதாருடன் பான் கார்டை இணைக்க இன்று கடைசி நாள்

Published On 2023-06-30 10:36 GMT   |   Update On 2023-06-30 13:40 GMT
  • ஆதாருடன் பான்கார்டு எண்ணை இணைக்க இன்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
  • இதனால் பலர் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

சேலம்:

வருமான வரி ஏய்ப்பை தடுப்பதற்காக ஆதாருடன் பான்கார்டு எனப்படும் நிரந்தர வருமான வரிக்கணக்கு எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

இதற்கான காலக்கெடு பலமுறை நீட்டிக்கப்பட்டது. இறுதி வாய்ப்பாக இன்று (30-ந்தேதி) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

1000 ரூபாய் அபராதமாக செலுத்தி இந்த தேதிக்குள் ஆதார்-பான் இணைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதன்படி ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் நாளை முதல் செயலற்றதாகிவிடும். ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்களுக்கு டி.டி.எஸ். பிடித்தம், மற்றும் செலுத்தும் விகிதம் அதிகரிக்கப்படும்.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது. வருமான வரித்துறையில் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகை மற்றும் வட்டி ரத்து செய்யப்படும்.

ஆதார்- பான் இணைக்க விரும்புவோர் மற்றும் தங்களின் இணைப்பு நிலவரத்தை தெரிந்து கொள்ள விரும்புவோர் மத்திய அரசின் வருமான வரித்துறை இணைய தளத்தை பயன்படுத்துமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று கடைசி நாள் என்பதால் சேலம், நாமக்கல் மாவட்டத்தில் பான்கார்டை ஆதாருடன் இணைக்காதவர்கள் ஆர்வமுடன் கணினி வாயிலாக இணைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News