பழமையான மொழி தமிழா? சமஸ்கிருதமா?- கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு
- தமிழ் மொழியையும், சமஸ்கிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள்.
- தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன.
சென்னை:
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்கிற திட்டத்தின் கீழ் மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
பீகார் மாணவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
பாரத நாடு என்பது கலாச்சாரம் மற்றும் நாகரிக வளர்ச்சியால் உருவானது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அது உருவாகி விட்டது. பாரதம் என்பது 1947-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாக பலர் நினைத்துக் கொண்டிருப்பார்கள். அது தவறாகும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாரதம் உருவாகி விட்டது.
தமிழ் மொழியையும், சமஸ்கிருத மொழியையும் பழமையான மொழிகள் என்று கூறுவார்கள். ஆனால் இதில் எது பழமையான மொழி என்பதற்கு தற்போது விடையும், முடிவும் கிடைக்காமலேயே உள்ளது. இதன் மூலம் பழமையான மொழி சமஸ்கிருதமா? இல்லை தமிழா? என்கிற விவாதம் நீண்டு கொண்டே செல்கிறது.
பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ராஜாக்கள் ஆண்ட காலத்தில் இருந்தே யார் வேண்டுமானாலும் எங்கும் செல்லலாம் என்கிற சூழல் இருந்து வந்துள்ளது.
அந்த வகையில் தமிழ் மொழியில் இருந்து சமஸ்கிருதத்துக்கு பல சொற்கள் வந்துள்ளன. அதே போல சமஸ்கிருதத்தில் இருந்து தமிழுக்கும் பல்வேறு சொற்கள் வந்துள்ளன.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
தமிழ்நாடு பற்றி கவர்னர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று கூறுவதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில்தான் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி பழமையான மொழி சமஸ்கிருதமா? தமிழா? என்கிற ரீதியில் கருத்துக்களை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.