உள்ளூர் செய்திகள்

மாணவர்கள் போராட்டம் நடத்திய போது எடுத்த படம்.

மாணவர்கள் போராட்டத்தால் மீண்டும் அதே பள்ளியில் பணிக்கு சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்

Published On 2022-07-30 09:00 GMT   |   Update On 2022-07-30 09:00 GMT
  • ஆசிரியரை தோல்மேல் தூக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்
  • போராட்டத்தின் போது சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றியம் சொரக்குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 10 ஆண்டு காலமாக உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வந்த பாபு என்ற ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்புக்களை புறக்கணித்து பள்ளியின் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உடற்கல்வி ஆசிரியர் இப்பள்ளிக்கு மீண்டும் வரவேண்டும் என்று மாணவர்கள் கோஷமிட்டனர். தகவல் அறிந்து விரைந்து வந்த கல்வி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இருப்பினும் உடற்கல்வி ஆசிரியர் வந்த பின்னரே நாங்கள் பள்ளிக்குள் நுழைவோம் என்று பிடிவாதமாக போரா ட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் பாபுவை மீண்டும் சொரகுளத்தூர் மேல்நிலைப் பள்ளியில் வந்து சேருமாறு அறிவுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து உடற்கல்வி ஆசிரியர் வந்து பள்ளியில் சேர்ந்ததும் உற்சாகமடைந்த மாணவர்கள் ஆசிரியரை தங்கள் தோல் மேல் தூக்கி அழைத்து வந்து மாணவர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அவரை கண்டு மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் மாணவர்கள் அனைவரும் தங்கள் வகுப்பறைக்கு சென்றனர்.

இந்த போராட்டத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக பள்ளி வளாகத்தின் முன்பு பரபரப்பு காணப்பட்டது. நீண்ட நேரமாக ஆவேசமாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர்.

அவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News