நேற்று இரவு அய்யங்குளத்தில் சுப்பிரமணியசுவாமி தெப்பல் திருவிழா நடைபெற்ற போது எடுத்த படம்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது
- பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வருகிற 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து
- இன்று இரவு சண்டிகேஸ்வரர் உற்சவம் நடக்கிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (சனிக்கிழமை) நிறைவடைகிறது. மேலும் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் வருகிற 16-ந் தேதி வரை அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த நவம்பர் மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாட்களில் தினமும் காலையில் விநாயகர், சந்திரசேகரர் வீதி உலாவும், இரவில் விநாயகர், முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி கடந்த 6-ந் தேதி நடைபெற்றது.
அன்று காலையில் கோவில் வளாகத்தில் பரணி தீபமும், மாலையில் 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது. மகா தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். தொடர்ந்து 7-ந் தேதி காலையில் இருந்து மறுநாள் 8-ந் தேதி காலை வரை பவுர்ணமி நீடித்ததால் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.
தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் கடந்த 7-ந் தேதி தொடங்கியது.
இரவு கோவில் அருகில் உள்ள அய்யங்குளத்தில் சந்திரசேகரர் தெப்பல் உற்சவம். நேற்று முன்தினம் காலையில் அருணாசலேஸ்வரர் கிரிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து இரவு பராசக்தி அம்மன் தெப்பல் உற்சவம் நேற்று சுப்பிரமணி சாமி தெப்பல் உற்சவமும் நடைபெற்றன.
இன்று (சனிக்கிழமை) மாலை சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் கார்த்திகை தீபத் திருவிழா நிறைவ டைகிறது. அப்போது சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வர உள்ளார்.
கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபம் கடந்த 6-ந் தேதி ஏற்றப்பட்டது. இந்த மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் மலை உச்சியில் மாலை நேரத்தில் ஏற்றப்பட்டு தொடர்ந்து காட்சி அளிக்கும்.
அதன்படி வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மகா தீபம் காட்சி அளிக்கும். மகா தீபத்தை தரிசனம் செய்ய தொடர்ந்து பக்தர்கள் வருகை தருவதால் அருணாச லேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்ப டுகிறது.
இதனால் வருகிற 16-ந் தேதி வரை கோவிலில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.