உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பையை அமைச்சர் மெய்யநாதன் வழங்கிய போது எடுத்த படம். 

மாநில அளவிலான குடியரசு தின தடகளப்போட்டி

Published On 2022-12-01 15:23 IST   |   Update On 2022-12-01 15:23:00 IST
  • வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்
  • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திருவண்ணாமலை:

குடியரசு தினவிழா தடகள போட்டி பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநில அளவிலான 63-வது குடியரசு தின தடகளப் போட்டிகள் திருவண்ணா மலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கடந்த 25-ந் தேதி தொடங்கி நேற்று வரை 6 நாட்கள் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து 7 ஆயிரத்து 500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14, 17, 19 என்ற வயதின் அடிப்படையில் முதல் 3 நாட்கள் வீராங்கனைகளுக்கும், அடுத்த 3 நாட்கள் வீரர்களுக்கும் என்று நடைபெற்றது.

இதில் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கோல் ஊற்றி தாண்டுதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம் பெற்றன.

இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாநில அளவில் குடியரசு தின தடகளப் போட்டிகளுக்கான நிறைவு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக விளையாட்டுத் துறை அமைச்சர் சிவ. வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு ஆண்கள் பிரிவில் 46 புள்ளிகள் பெற்ற தேனி மாவட்ட அணியினருக்கும், மகளிர் பிரிவில் 55 புள்ளிகள் பெற்ற சேலம் மாவட்ட அணியினருக்கும் தனித் தனியே ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கோப்பையை வழங்கி பாராட்டினார்.

மேலும் அதிக பதக்கங்களை பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கும் கோப்பைகளை வழங்கினார். முன்னதாக நடைபெற்ற போட்டிகளில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடம் பிடித்த வீரர், வீராங்கனைகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களும், சான்றி தழ்களும் வழங்கப்பட்டது.

முன்னதாக 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட வீரர்களுக்கான 200 மீட்டர் இறுதி சுற்று ஓட்டப்பந்த யத்தினை அமைச்சர் பார்வையிட்டார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் பலாமுருகன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், மாவட்ட உற்கல்வி அலுவலர் முத்துவேல் உள்பட பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News