உள்ளூர் செய்திகள்

ஆந்திராவில் பேரக்குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பதாக கூறி எஸ்.பி. ஆபீஸ் முன்பு பெண் தர்ணா

Published On 2022-10-12 09:39 GMT   |   Update On 2022-10-12 09:39 GMT
  • சொந்த பிரச்சினையால் மகளும், மருமகனும் தற்கொலை
  • நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதிகாரிகள் உறுதி

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை டவுன் புது வாணியங்குளம் முதல் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி ஆதிலட்சுமி (வயது 41). இவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆதிலட்சுமி கூறியதாவது:-

கணவரால் கைவிடப்பட்ட நான் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறேன். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகளுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மகளும், அவரது கணவரும் சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டனர்.

இதனால் மூத்த மகளின் குழந்தைகளை அவரது கணவரின் உறவினர்கள் அழைத்து சென்று விட்டனர். தற்போது தனது பேரக்குழந்தைகளை ராஜஸ்தான், ஆந்திரா, மராட்டியம் போன்ற மாநிலங்களில் சிவன், பார்வதி போன்ற கடவுள் வேஷமிட்டு பிச்சை எடுக்க வைத்து கொடுமைப்படுத்தி வருகின்றனர்.

எனது பேரக்குழந்தைகள் பிச்சை எடுத்ததற்கான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எனது பேரக்குழந்தைகளை கேட்டால் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே இதுகுறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும், போளூர் போலீஸ் நிலையத்தில் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உரிய நடவடிக்கை எடுத்து எனது பேரக்குழந்தைகளை அவர்களிடம் இருந்து மீட்டு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அப்போது அவருடன் மற்ற மகள்களும் இருந்தனர். இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News