கொத்தடிமையாக வேலை பார்த்த 3 சிறுவர்கள் மீட்பு
- ரூ.10,000 பெற்றுக்கொண்டு ஆடு மேய்க்க விட்ட அவலம்
- காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்
செங்கம்:
செங்கம் அருகே கொத்தடிமைகளாக வேலை பார்த்த 3 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.
செங்கம் அருகே உள்ள அரியாக்குஞ்சூர் இருளர் காலனி பகுதியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் அவரது பிள்ளைகள் சிறுவர்களான 3 பேரை ரூ.10,000-த்திற்கு கொத்தடிமைகளாக அரட்டவாடி பகுதியை சேர்ந்த ஒருவரின் ஆடுகளை மேய்ப்பதற்காக விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட சைல்ட் லைனிற்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து குழந்தைகள் நல அலுவலர்கள் அப்பகுதியில் வந்து விசாரணை செய்தனர்.
அப்போது 3 சிறுவர்களும் அரட்டவாடி காட்டு பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறுவர்களை மீட்டு செங்கம் பகுதியில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டு உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது. பின்னர் சிறுவர்களை திருவண்ணாமலை குழந்தைகள் நல காப்பகத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் சென்றனர்.