உள்ளூர் செய்திகள்
பைக் விபத்தில் அஞ்சலக பெண் ஊழியர் சாவு
- காட்டுப் பன்றிகள் மீது மோதியதால் விபரீதம்
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த கொட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அரசுப் பஸ் டிரைவர் பாலச்சந்தர். இவரது மனைவி ரேவதி (42). இவர் வந்தவாசி அடுத்த மழையூர் துணை அஞ்சலகத்தில் அஞ்சல் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு நவநீதகிருஷ்ணன் என்ற மகன் உள்ளார்.
ரேவதி நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் பணி முடித்துவிட்டு பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
வந்தவாசி-சேத்பட் சாலை, பொன்னூர் மலை அருகே சென்றபோது சாலையின் குறுக்கே கூட்டமாக வந்த காட்டுப் பன்றிகள் மீது பைக் மோதியது. இதில் ரேவதி நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த ரேவதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பாலச்சந்தர் அளித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.