கோப்புபடம்
திருவண்ணாமலையில் அதிகரித்து வரும் கொரோனா
- போலீஸ் சூப்பிரண்டும் பாதிப்பு
- கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு போன்று பல்வேறு நடைமுறைகள் கையாளப்பட்டு கொரோனா நோய் தொற்றின் பரவல் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு கைவிடப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை.
எஸ்.பி.கள் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தரப்பில் தெரிவித்த தகவலின் படி நேற்று முன்தினம் மட்டும் 13 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 79 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தி கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 66 ஆயிரத்து 945 பேர் கொரோனா நோய் தொற்றிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 66 ஆயிரத்து 181 பேர் குணமடைந்து உள்ளனர். 685 பேர் நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பொது இடத்திற்கு வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.