ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பெற்ற பெண் திடீர் சாவு
- திடீரென உடல் நலம் பாதிப்பு
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை
கலசபாக்கம் அடுத்த மேப்பத்துறை கிராமம் பேங்க் தெருவை சேர்ந்தவர் பரசுராமன். இவரது மனைவி தமிழரசி (வயது 26) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.
இந்த நிலையில் தமிழரசி மீண்டும் கர்ப்பமானார், நிறைமாதகர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் மாலை அருகே உள்ள நார்த்தாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர்கள் அவருக்கு மகப்பேறு சிகிச்சை அளித்தனர் இந்த நிலையில் தமிழரசிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை டாக்டர்கள் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசி பரிதாபமாக இறந்து விட்டார்.
இச்சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது மேலும் இது சம்பந்தமாக முறையான சிகிச்சை அளிக்கப்படாத காரணத்தால் தமிழரசி இறந்து உள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். மேலும் இது குறித்து கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.