உள்ளூர் செய்திகள்

நாய்கள் கடித்து ஆடுகள் இறந்து கிடக்கும் காட்சி.

மர்ம விலங்கு, வெறி நாய்கள் கடித்து 36 ஆடுகள் பலி

Published On 2023-03-10 15:33 IST   |   Update On 2023-03-10 15:33:00 IST
  • பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர்
  • கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல்

வேட்டவலம்:

வேட்டவலம் அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாராம் (வயது 55). இவர் அதே பகுதியில் உள்ள தனது சொந்தமான விவசாய நிலத்தில் ஆட்டுப்பட்டி அமைத்து 35-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.

இவர் தினமும் செம்மறி ஆடுகளை காலை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று மீண்டும் மாலை ஆடுகளை ஆட்டுப்பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வழக்கம்போல் ராஜாராம் நிலத்தில் உள்ள ஆட்டுப்பட்டிக்கு சென்றார்.

அப்போது அங்குள்ள செம்மறி ஆடுகளை மர்ம விலங்குகள் கடித்ததில் ரத்தம் வெள்ளத்தில் குடல்கள் சரிந்தும் இறந்து கிடந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் இது குறித்து வைப்பு கிராம நிர்வாக அலுவலர் அவர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதில் மர்ம விலங்குகள் கடித்ததில் 23 க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது தெரியவந்தது. மேலும் அங்கு வந்த மருத்துவர் கவிதா இரண்டு ஆடுகளை சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்து பின்னர் செம்மறி ஆடுகளை அதே பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டி புதைத்தனர்.

செய்யாறு அருகே உள்ள தண்டரை கிராமம், யாதவர் தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 31), லாரி டிரைவர்.

நரசிம்மன் தாயார் மல்லிகா. வீட்டின் அருகே கொட்டகை வைத்து 40 ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆடுகளை நேற்று மதியம் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று மாலையில் பட்டியில் அடைத்தார்.

இரவு 2 மணி அளவில் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது 5 வெறிநாய்கள் கடித்து குதறின. உரிமையாளர் வந்தவுடன் நாய்கள் ஓடி விட்டன.

ஆட்டுப்பட்டியில் இருந்த 13 ஆடுகள் இறந்து கிடந்தன. ஏற்கனவே ஒரு வாரத்துக்கு முன்பு அதே தெருவில் வசிக்கும் ராஜேந்திரன் என்பவரின் 7 ஆட்டுக்குட்டிகளை நாய்கள் கடித்து குதறியது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News